Sun. Oct 6th, 2024

கால்நடை பராமரிப்புத்துறை | மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் 

கால்நடை பராமரிப்புத்துறை | மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள்

ஜூலை, 5 ,2019

கால்நடை பராமரிப்புத்துறை மீதான மானியக் கோரிக்கையில், நவீன கரு மாற்று தொழில்நுட்பம் மூலம் 169 மாட்டினங்களைச் சார்ந்த கன்றுகளை உருவாக்குதல் உட்பட பல்வேறு திட்டங்கள்,சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

கறவை மாட்டு பண்ணையத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்திட, பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகள் ஒன்றுக்கு ரூபாய் 1200 மதிப்பில் 50,000 எண்ணிக்கையில் வழங்கி செயற்கை முறை கருவூட்டல் பணியை மேற்கொள்ள ரூபாய் 4.5 கோடி செலவிடப்படும்.

தமிழகத்தின் பாரம்பரிய உள்நாட்டு இனங்களான பர்கூர், காங்கேயம்,புலிக்குளம் மற்றும் சிவப்பு சிந்தி ஆகியவற்றைப் பாதுகாத்து, அதிநவீன கரு மாற்று தொழில்நுட்பம் மூலம் 169 கன்றுகளை உருவாக்குவதற்காக ரூபாய் 4.54 கோடி செலவிடப்படும். மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு 1.63 கோடி ரூபாய் செலவில் கன்று வீச்சு நோய்க்கு, கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், 5.66 கோடி செலவில் கோ(எப்எஸ்)29, கம்பு நேப்பியர் சோளம் மற்றும் காராமணி போன்ற பசுந்தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும்.

தரமான பசும்தீவனத்தின் 29 விதைகள், 43.80 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யும் பொருட்டு, 70 லட்சம் செலவில் ஈச்சங்கோட்டை நடுவூர் செட்டிநாடு மற்றும் படப்பை ஆகிய துறையின் நான்கு கால்நடைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும். பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்கு, விதைகள் மற்றும் உரங்கள் அடங்கிய 4 கிலோ கிராம் விதை தொகுப்பு, ரூபாய் 5.4 1 கோடி செலவில் 90 ஆயிரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இனப்பெருக்க உள்ளீடுகளான, திரவ நைட்ரஜன் மற்றும் உறைவிந்து குச்சிகள் ஆகியவற்றை விநியோகிக்கும் வலையமைப்பினை வலுப்படுத்துவதற்காக, வாகனம் ஒன்றிற்கு ரூபாய் 15 லட்சம் வீதம், 10 போக்குவரத்து வாகனங்கள், ரூபாய் 1.5 கோடி செலவில் வழங்கப்படும்.

சேலம் மேச்சேரி செம்மறி ஆடுகளின் மரபணுவினை உயர்த்த, 1027 தரம் உயர்த்தப்பட்ட கிடா குட்டிகள், சேலம்,திருப்பூர், கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 5.25 கோடி செலவில் வழங்கப்படும் வரையறை செய்யப்படாத, செம்மறி ஆடுகளின் மரபியல் தரத்தை செயற்கை முறை கருவூட்டல் மூலம் மேம்படுத்துவதற்காக, சேலம் மாவட்டத்தில் மேச்சேரி செம்மறி ஆட்டின் திரவ விந்து உற்பத்தி நிலையம், ரூபாய் 2.23 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூபாய் 20,000 மதிப்பீட்டில் தானியங்கி புல் நறுக்கும் கருவி கள் 75 விழுக்காடு மானியத்தில் 6 கோடி செலவில், இனி விநியோகிக்கப்படும். தரமான நாட்டுக் கோழிகள் வழங்குவதற்காக, நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பன்னையுடன் இணைந்த குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன அளகு ரூபாய் 48.4 1 கோடி செலவில், சேலம் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் நிறுவப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன், ஒரு பயனாளிக்கு 1.125 லட்சம் வீதம், 2.25 கோடி செலவில் 200 பயனாளிகளுக்கு கறி கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ஒன்றிற்கு, ஒரு கோடி வீதம் நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 2 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். கால்நடைகளுக்காக 1658 கால்நடை நிலையங்களில் தலா 25 ஆயிரம் மதிப்பில் 4.15 கோடி செலவில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்படும்.

நமது நிருபர்