Mon. Oct 7th, 2024

அடையாளம் தெரியாத முதியவர் உடலை வாங்க மறுத்த | அரசு பிரேத பரிசோதனை நிலையம் |

பழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகே நேற்று மதியம் 12 மணியளவில் சுமார் 75 வயதுடைய முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக… பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளர் நடராஜ் என்பவருடன் போலீசார் சென்று முதியவர் உடலை கைப்பற்றினார்கள்.

ஆலந்தூர், ஜுன். 15-

இந்த சம்பவம் தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெயில் கொடுமையினால் இறந்து இருக்கலாம் என்றும் அவரின் விவரம் எதுவும் தெரியாததால்… பகல் 1 மணிக்கு உடலை பிரேத அறையில் வைக்க காவலர் ஏழுமலை என்பவர் முதியவரின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அடையாளம் தெரியாத உடலை இங்கு வைக்க முடியாது. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி அனுப்பி விட்டனர். சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நீங்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அனுப்பினர். இதையடுத்து பழவந்தாங்கல் போலீசார் முதியவர் உடலுடன் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உடலை உங்கள் எல்லைக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தான் வைக்க வேண்டும் என்று கூறி பிரேத அறையில் வைக்க மறுத்துவிட்டனர். இரவு 10மணி வரை முதியவர் உடலுடன் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்றனர். ஆனால் யாரும் உடலை பிரேத அறையில் வைக்காமல் அலைக்கழித்தனர். பின்னர் போலீசார் குரோம்பேட்டை மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசி பின்னர் தான் உடலை பிரேத அறையில் வைக்க அனுமதித்தனர்.

நமது நிருபர்