Sat. Dec 21st, 2024

ஆயுதங்களுடன் வீட்டில் பதுங்கி இருந்த | 3 ரவுடிகள் கைது |

மே, 14-2019…,

கொருக்குப்பேட்டை கார்னேஷ் நகர் பகுதியில் ரவுடிகள் சிலர் கத்திகளுடன் அடிக்கடி சுற்றித்திரிவதாகவும், இதனால் தாங்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 5 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். 3 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர்.

கைது பிடிபட்ட
3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பரத்குமார் (19), சாம்பார் என்ற விக்னேஷ் (19) மற்றும் தண்டையார்பேட்டை துர்காதேவி 2-வது தெருவைச் சேர்ந்த பாலாஜி (19) என்பது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்ட ரவுடிகள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட 13 ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. எதற்காக இவர்கள் அந்த வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர்?. யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி சதி திட்டம் தீட்டினரா?. அல்லது அந்த பயங்கர ஆயுதங்களை வேறு எந்த ரவுடி கும்பலுக்காவது வினியோகம் செய்ய பதுக்கி வைத்து இருந்தனரா? என்ற கோணத்தில் கைதான மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர் மேலும் கைதான பரத்குமார், விக்னேஷ் ஆகியோர் மீது ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களில்… பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய இவர்களின் கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்…

நமது நிருபர்