Mon. Oct 7th, 2024

கட்டப் பஞ்சாயத்து பேச வந்தவரே.. அடித்து பணம் கேட்ட அவலம்..!!

மே, 12-2019…,

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 1 கோடி பணம் பறித்த சம்பவத்தில் திடீர் திருப்பம். அழைத்து வந்தவரிடமே கைவரிசை காட்டிய கும்பல் 2. தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் கட்டப் பஞ்சாயத்து பேச தங்களை அழைத்தவரிடமே ஒருகோடி ருபாய் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் முகமது தாஹிர். ( இவரது பெயர் நாராயணன்- சில ஆண்டுகளுக்கு முன் மதம் மாறியவர்)

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். போரூர் அருகே உள்ள 110 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா ஏற்பாடு செய்து தருவதற்காக, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ராமகிருஷ்ணன், ராஜதுரை ஆகியோரிடம்  ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி தாஹிர் பட்டா வாங்கித்தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், ராஜதுரை இருவரும் தாஹிரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாயத்து பேசுவதற்கு தனக்கு அறிமுகமான நெல்லையை சேர்ந்த ஜான் இளங்கோவை சென்னை வரவழைத்துள்ளார் தாஹிர். பிறகு ஜான் இளங்கோ தலைமையில் தாஹிர் எதிர் தரப்பை சேர்ந்த ராமகிருஷ்ணன், ராஜதுரை ஆகியோரிடம்  துரைப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது தாஹிரிடம் நிறைய பணம் இருப்பதை உறுதி செய்த ஜான் இளங்கோ கும்பல், தங்களை பஞ்சாயத்து பேச அழைத்து வந்தவர் என்றும் பாராமல் தாஹிரின் மண்டையை உடைத்து அவரை சித்திரவதை செய்து பின்னர் தாஹிரின் மனைவியை தொடர்பு கொண்ட ஜான் இளங்கோ கும்பல் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் தாஹிரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து தாஹிரின் மனைவி தஹிரா பானுவை அண்ணா சதுக்கம் அருகே வரவழைத்தனர். ஒரு கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு தாஹிரை விடுவித்து விட்டு ஜான் இளங்கோ கும்பல் தப்பிவிட்டது.

இதுதொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜான் இளங்கோ கும்பலை  பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிப்படை நெல்லையிலும், மற்றொரு தனிப்படை சென்னையிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்…

நமது நிருபர்