பண்ருட்டி | பிரபல தொழிலதிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது |
பண்ருட்டி,மே.11– 2019…,
பண்ருட்டியில் கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரை பணம் கேட்டு கடத்திய வழக்கில் 6 பேரை பண்ருட்டி போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.
பண்ருட்டி போலீஸ் லைன் காமராஜர் நகரை சேர்ந்த.. பிரபல தொழிலதிபர் விஜயரங்கன் (52). இவர் முன்னாள் நகரமன்ற துணை சேர்மனாக இருந்துள்ளார். இவரிடம் கடந்த 7 ம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர்கள்… ஏற்கனவே நாங்கள் தான் கடத்தினோம் ஞாபமகம் இருக்கா என பேசினர்.
நேற்று முன்தினம் 9 ம்தேதி மீண்டும் 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஆடியோ மெசஜ் போட்டனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் விஜயரங்கன் புகார் அளித்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் பண்ருட்டி அடுத்த அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி மாயவன் (48) என்ப்வர் நேற்று காலை பண்ருட்டியில் விஜயரங்கன் வீட்டில் வியாபாரத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு பண்ருட்டி காய்கறி மார்க்கெட் செல்ல காந்திசாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாயவனை பின் தொடர்ந்து டாடா சபாரி காரில் வந்த மர்ம நபர்கள் மாயவனை கடத்தி, அவரிடம் இருந்த 50 ஆயிரம் பணத்தை பிடிங்கிகொண்டு அவரை லிங்க்ரோட்டில் விட்டுவிட்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி.நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் உஷாராகி… அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அருகே நின்றிருந்த சபாரி காரில் இருந்த பெரியகாட்டுப்பாளையம் சேர்ந்த செல்வா (25), புலியூர் சேர்ந்த விஜயகுமார் (26), கிழிருப்பு சேர்ந்த வாசு (23), பெரியகாட்டுப்பாளையம் சேர்ந்த சுபாஷ் என்கிற ராஜீ (22) ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் மாயவனை கடத்தி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் கடந்த 2018 ஜூன் மாதம் 23 ம்தேதி தொழிலதிபர் விஜயரங்கனை கடத்தியதில் இந்த நான்கு பேர் கும்பலுடன்… மேலும் இருவர் சேர்ந்து 6 பேர் ஈடுபட்டிருப்பதும், கடந்த 7 ஆம் தேதி முதல் விஜயரங்கனை மிரட்டி மேலும் பணம் பெற திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பண்ருட்டி அவையாம்பாளையம் தெருவை சேர்ந்த கார்த்திக் (37), காட்டாண்டிக்குப்பம் சேர்ந்த குரு சக்கரவர்த்தி (24) ஆகிய இருவரையும் ஐயனார் கோவில் அருகில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பி.ஒய். 01.சிபி.3540 என்கிற டாடா சபாரி கார் , 50 ஆயிரம் பணம், மற்றும் கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்…
நிருபர் ராம்