Mon. Oct 7th, 2024

சென்னை |மயிலை கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் சார்பில் | இலங்கை குண்டுவெடிப்பிற்கு இரங்கல் ! |

மே, 3 – 2019..

சென்னை மயிலை கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் சார்பில் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல்!

சென்னை மயிலை கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் சார்பில் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு இரங்கல் மற்றும் கண்டனக் கூட்டம் சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்றது.

பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அருட்தந்தையர்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள் கலந்துக்கொண்டு குண்டுவெடிப்பில் பலியானோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இயேசு பெருமானின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த புனிதமிகு திருநாளில்… நம் அண்டை நாடான இலங்கையில் நடந்ததேறிய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவமானது, அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மதத் தீவிரவாத சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான இச்செயலால் தேவாலயங்கள், தங்கும் விடுதிகள், மற்றும் மக்கள் கூடும் பொதுஇடங்கள் என. ஏறக்குறைய 9 இடங்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வெக்குண்டு தாக்குதலுக்கு ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர், சிறார்கள் மற்றும் குழந்தைகள் என உள்நாட்டவரும் அயல்நாட்டவருமாக சுமார் 265 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சமயம், மொழி, நாடு ஆகிய வேற்றுமைகளையும் கடந்து… இந்த வெறிச்செயலுக்கு பலியான எல்லா சகோதர சகோதரிகளுக்கும் உயிர்நீத்த எல்லா ஆன்மாக்களுக்கும், இறைவன் தமது முடிவில்லா விண்ணக இளைப்பாறுதலை தரவேண்டி இத்தருணத்தில் உருக்கமாக மன்றாடுகிறோம். கொத்து கொத்தாக தங்களின் உறவுகளையும், பெற்றோர் பிள்ளைகளையும் காண்ணெதிரிலேயே தொலைத்துவிட்டு மீளாத்துயரில் வாடிநிற்கும் எல்லாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.