Mon. Oct 7th, 2024

அம்மிக்கல், ஆட்டு உரலுக்கு அருங்காட்சியகம் அமைத்த குடும்பம்..!

அம்மிக்கல், ஆட்டுக்கல் உரல், உலக்கை, கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்பத்தினர்

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அம்மிக்கல்,ஆட்டுக்கல், உரல் , உலக்கை என அனைத்தும் இருக்கும்

அம்மிக்கல் கருங்கல்லினால் செய்யப்பட்டதாகும் அம்மிக்கல்லில் உணவுக்கு தேவையான பொருட்களை குழவிக்கல் கொண்டு அரைப்பதற்கு பயன்படுத்துவதாகும்.

ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் கல்லினால் செய்யப்பட்ட சாதனமாகும். ஆட்டுக்கல் நடுப்பகுதி குழியாக இருக்கும். அரைக்க வேண்டிய தானியத்தை குழியில் இட்டு குழவியை கொண்டு கையால் சுற்றினால் அரைபடும் தானியம் மாவாகும்.

உரல் தானியங்களை இடிக்க பயன்படும். 2 அல்லது 3 அடி உயரம் கொண்ட கல்லில் ஆன உரல் நடுவில் குழியுடன் வட்ட வடிவில் இருக்கும் உரலினால் இடித்தால் பொடியாகும். ஒவ்வொரு வீட்டிலும் நெல் குத்த பயன்படுத்தப்பட்டது உரல்.

கல்வம் மருந்து அரைக்க பயன்படுத்தப்படும் கல்லில் ஆன சாதனமாகும்

திருகை தானியங்களை உடைக்க பயன்படுத்தப்படும் கருங்கல் சாதனமாகும். வட்ட வடிவமான திருகையில் கீழ்ப்பகுதி அசையாமல் இருக்கும் படி அமைக்கப் பட்டிருக்கும். மேல் பகுதி சுற்றக்கூடிய வகையில் நடுவில் குழியுடன் இருக்கும் அக்குழியில் தானியங்களை இட்டு சுற்றும் பொழுது அவை பொடியாக ஆக்கப்படும்.

பண்டைய தமிழர் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருளாக இருந்த அம்மிக்கல் ,ஆட்டுக்கல், உரல் ,கல்வம் ,திருகை உள்ளிட்டவை இயந்திரங்களின் வரவால் பயன்பாடு குறைந்து இன்று நகர்ப்புறங்களில் காண்பதே அரிதாகி விட்டன.

அப்படி அரிதான அம்மிக்கல் , ஆட்டுக்கல், திருகை, உலக்கை, உரல் கொண்டு தனது வீட்டின் முன் காட்சிப்படுத்தி அருங்காட்சியமாக ஆக்கிவிட்டார்கள். திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் வசித்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா குடும்பத்தினர்.

இல்லத்திற்கு வருபவர்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ள பொருளை பார்த்து பழங்கால நினைவுகளை ஆசை, ஆசையாக அசை போடுகின்றார்கள்.

திருச்சி விஜயகுமார்.