Sat. Dec 21st, 2024

ஒருவரின் ஓட்டுக்காக ₹ 10,000 செலவு செய்யும் தேர்தல் ஆணையம்

குஜராத்தில் நாளை மறுதினம் ஏப்ரல் 23 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தனிமை விரும்பியான மஹந்த் பரத்தாஸ், குஜராத்தின் ஜுனாகட் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற கிர் சரணாலயம் அருகே உள்ள பனீஜ் கிராமத்தின்‌ வனப்பகுதியில் வசித்து வருகிறார். 50 வயதை கடந்துள்ள இவருக்கு வனவிலங்குகளே துணையாக இருக்கிறது. வனத்தில் வசித்து வந்தாலும் வாக்குப்பதிவு செய்வதை ஒருபோதும் தவறவிட்டதில்லை‌. ஆசிரமத்தில் வசித்து வரும் மஹந்த் பரத்தாஸ் வாக்களிக்க கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ‌தனி வாக்குச்சாவடி‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜுனாகட் மக்கள‌வைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மஹந்த‌ பரத்தாஸ் வாக்குப்பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மூன்று தேர்தல் அதிகாரிகள், ஒரு காவலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்‌. ‌இதற்காக தேர்தல் ஆணையம் 10 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது.

எந்த வாக்காளரும் தனது பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே வாக்குப்பதிவு செய்ய பயணிக்க வேண்டும் என்ற தேர்தல் விதிமுறைகள் இருப்பதால், மஹந்த் பரத்தாசுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜுனாகட் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பி‌ரஜாபதி தெரிவித்துள்ளார்.

‌வனப்பகுதியில் வாக்குச்சாவடி இருப்பதால் மொபைல் ‌சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வயர்லெஸ் சேவையை பயன்படுத்துகின்றனர். ‌

மஹந்த் பரத்தாஸ் ‌எப்போது‌ வாக்களிக்க வந்தாலும் தேர்தல் அதிகாரிகள் மாலை 6 மணிவரை பணியில் இருப்பார்கள். அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஒரு வாக்காளருக்காக ‌வாக்குச்சாவடி ஏற்படுத்துவது தங்களின் கடமை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தனக்காக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு தலைவணங்குவதாக‌ மகந்த் பரத்தாஸ் தெரிவிக்கிறார்.