திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு சென்ற | 1381 கிலோ தங்கம் பறிமுதல் |
தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை
நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பனப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்லபாண்டியன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.அப்போது வேகமாக வந்த 3 வாகனங்களை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது அதில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1381 கிலோ தங்க கட்டிகள் எடுத்து செல்வதாக தெரிவித்தனர். அந்த இரண்டு வாகனங்களை திறந்து ஆய்வு செய்தனர் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்தபோது திருப்பதி தேவஸ்தானம் பஞ்சாப் நேசனல் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தை வைப்பு நிதியில் வைத்திருந்தது. அதன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஸ்விட்சர்லாந்தில் இருந்து சுமார் 1381 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தனியார் நிறுவனம் மூலம் ஆந்திராவில் உள்ள வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒப்படைக்கப்பட எடுத்து செல்வது தெரியவந்தது மேலும் ஒரு வண்டியில் 30 சிறிய பெட்டிகளும் மற்றொரு வண்டியில் 26 சிறிய பெட்டிகளில் தங்கம் இருப்பது தெரியவந்தது.
மேலும் ஒரு பெட்டியின் தங்கத்தின் எடை 25 கிலோ என தெரியவந்தது இந்த தங்கம் பிடிபட்டது குறித்து திருப்பதி தேவஸ்தானம் தங்களுடைய தங்கம் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆவணங்களை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆவணங்கள் முறையாக பரிசோதனை செய்த பிறகு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் 1381 கிலோ தங்கம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
நமது நிருபர்