Fri. Dec 20th, 2024

சொத்து பிரச்சனையில் தாயை கொலை செய்த மகன் |

சொத்து தகராறு காரணமாக தாயை கொலை செய்த மகன்… தப்பி ஓடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

சங்ககிரியை பூர்வீகமாக கொண்டவர் ரத்தினம்(63). இவர் முன்னாள் அதிமுக எம்.பி குழந்தைவேலுவின் மனைவி ஆவார். ரத்தினம் சென்னை பெசன்ட் நகர் பீச் சாலையில் உள்ள தனது மகன் பிரவீன் (36) வீட்டிற்கு இன்று காலை வந்துள்ளார். இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மகன் பிரவீன் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், ரத்தினத்தின் மகன் பிரவீன் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். அவருக்கு அங்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சினை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார். இவர் தற்போது பெசன்ட் நகர் பீச்சில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாய் ரத்தினம் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து இன்று காலை தான் மகனைச் சந்திப்பதற்காக பெசன்ட் நகர் வந்துள்ளார். சொத்துப் பிரச்னையை பேசித் தீர்க்கும் போது பிரச்சனை பெரிதாக மாறி இருக்கிறது. இதனால் இரவு 10 மணியளவில் அளவில் பிரவீன் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகனை தேடும் பணியில் சாஸ்திரிநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

நமது நிருபர்