Fri. Dec 20th, 2024

திருப்பதி அருகே இருக்கும் பீமவரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீது கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

கடத்தல் கும்பலை விரட்டி அடிக்க வானத்தை நோக்கி போலீசார் ஒரு ரவுண்ட் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதிக அளவில் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என்பதால் அவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் பீமாவரம் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த குமார் கைது.

40 பேர் தப்பி ஓட்டம்.

செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று மாலை வழக்கம்போல் சேஷாசலம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
திருப்பதி சமீபத்தில் இருக்கும் பீமாவரம் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போலீசார் செம்மரக்கட்டைகளை சிலர் தூக்கி வருவதை பார்த்தனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது கற்களை வீசி கடத்தல் கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. கடத்தல் கும்பலில் அதிக நபர்கள் இருந்ததால், தற்காப்புக்காக போலீசார் ஒரு ரவுண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கடத்தல் கும்பலை விரட்டி அடித்தனர். தப்பியோடிய கடத்தல் கும்பலில் தர்மபுரி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தமிழ்நாட்டில் வேலை கிடைக்காத காரணத்தால் கேரளாவுக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தேன். சமீபத்தில் ஊர் திரும்பிய என்னை அணுகிய சிலர் பத்தாயிரம் ரூபாய் பணம் தருகிறோம். செம்மரம் எட்டுவதற்கு வருகிறாயா என்று கேட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு செம்மரம் வெட்ட வந்தேன். போலீசார் எங்களை பார்த்தவுடன் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி தப்பி ஓடினோம். ஆனால் என்னை போலீசார் பிடித்து விட்டனர். எட்டு நாட்களுக்கு முன்னர் இங்கு வந்த நாங்கள் 10 மரங்களை வெட்டி தூக்கி வந்தோம். போலீசார் என்னை பிடித்து விட்டனர். நாங்கள் 20 பேர் மரம் வெட்டுவதற்காக வந்திருந்தோம். மேலும் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்றும் செம்மரம் வெட்ட வந்திருந்தது. அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்…

AK@ஆனந்தகுமார்