Sun. Oct 6th, 2024

பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை | பழைய இரும்புக்கடையில் விற்ற வாலிபர் |

பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை பழைய இரும்புக்கடையில் விற்ற வாலிபன்

காயலான் கடையில் விற்கப்பட்ட வள்ளி ஐம்பொன் சிலை மீட்பு, வாலிபரிடம் விசாரணை

தண்டையார்பேட்டை காயலான் கடையில் விற்பனை செய்யப்பட்ட வள்ளி ஐம்பொன் சிலையை மீட்டுள்ள போலீசார், இதுதொடர்பாக வாலிபரிடம் விசாரணை நடத்துகின்றனர். சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் குடிசை பகுதி அருகேயுள்ள குப்பை தொட்டியில் சாமி சிலை கிடப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவல்படி, உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையில் போலீசார் விரைந்தனர். அங்கு குப்பை தொட்டியில் கிடந்த 3 அடி உயரம், 60 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை மீட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சாலையோரத்தில் குப்பை பொருக்கும் கணேசனும் (25) அவரது கூட்டாளியும் சிலையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றனர் என்று தெரிவித்தார். இதையடுத்து கணேசனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர் அப்போது கணேசன் கூறும்போது 2 சிலைகளும் ஒரு பழைய கட்டிடத்தில் கிடைத்தது.

அதில் ஒன்றை அதே பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்றேன். மற்றொரு சிலையை விற்பதற்காக குப்பை தொட்டியில் போட்டு வைத்திருந்தேன்’ என்றார். இதையடுத்து போலீசார் கணேசனுடன் பழைய இரும்பு கடைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்த வள்ளி சிலையை மீட்டனர். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணேசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.