பொள்ளாச்சி SP மற்றும் DSP இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என | டிஜிபி-யை சந்தித்து புகார் |
பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்ப முயற்சிக்கும் கோவை மாவட்ட எஸ்பி. பாண்டியராஜனையும் பொள்ளாச்சி டிஎஸ்பி – யையும் பணி மாறுதல் செய்ய வலியுறுத்தி வெல்ஃபேர் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு.சுப்பிரமணி அறுமுகம் தலைமையில் இன்று 14.03.2019 காலை 11.30 மணியளவில் தமிழக டிஜிபி-யை சந்தித்து புகார் அளித்தனர்.
புகாரில் :
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களின் மீது நடத்தப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தையே வெட்கித் தலைகுனிய வைக்க கூடிய மாபாதகச் செயலாகும். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட எல்லா குற்றவாளிகளையும் மிகக் கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் என்பது தமிழக மக்களுடைய எதிர்பார்ப்பாகும் இனி இதைப் போன்ற ஒரு செயலில் யாரும் ஈடுபட்ட துணியாத அளவிற்கு ஒரு தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜனும் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமனும் வழக்கை திசைதிருப்பும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. பல அரசியல்வாதிகளுக்கும் இக்குற்றச்செயலில் தொடர்புண்டு என செய்திகள் வெளியாகும் நிலையில் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அரசியல்வாதிகள் யாருக்கும் இக்குற்றச்செயலில் தொடர்பில்லை என சொல்லியிருக்கிறார் எஸ்.பி பாண்டியராஜன். இது வழக்கை திசை திருப்புவதற்கான முயற்சி என பலருக்கும் சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. பாண்டியராஜன் தொடர்ந்து பதவியில் இருந்தால் அது வழக்கை நீர்த்துப் போகச் செய்யும்.
மேலும் குற்றச் செயலில் தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருப்பவர்கள் மீது மிகக் கடுமையான முறையில் நடவடிக்கைகளை எடுத்து போராட்டங்களை முடக்க நினைக்கிறார் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன். நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் மீது கடுமையான வழிமுறைகளை பொள்ளாச்சி காவலர்கள் மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் நீதிக்காக போராடுபவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது என்பது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயலாகும்.
எனவே இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்து மேற்படி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்களையும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய உண்மையான குற்றவாளிகளையும் தப்ப விடுவதற்கு SP பாண்டியராஜனும் DSP ஜெயராமனும் முயலுகிறார்கள் என்ற ஐயப்பாடு பரவலாக எழுந்துள்ள சூழலில் அவர்களை மேற்படி பொறுப்புகளிலிருந்து மாற்றும்படி வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு நிர்வாகம் சார்பாக டிஜிபி-யை சந்தித்து புகார் அளித்தனர்.