போலீஸ் ஸ்டேஷனிலேயே போலீஸ் மீது புகார் | தேனியில் பரபரப்பு
பணிபுரியும் காவல் நிலையத்திலேயே பெண் ஆய்வாளர் மீது எஃப்.ஐ.ஆர். -தேனியில் பரபரப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோக். வழக்கறிஞரான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, தனது கட்சிகாரர்களான தாமரைக்குளத்தைச் சேர்ந்த பரமன், கணேசன் மற்றும் செல்வம் ஆகியோரது வழக்கு விசாரணைக்காக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். வழக்கு சிவில் வழக்காக இருப்பதால், நீதிமன்றத்தை அணுகித் தீர்வு காண இருப்பதாக அசோக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஆய்வாளர் மதனகலா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன், அசோக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது வழக்கறிஞர் அடையாள அட்டை மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்து, சட்டவிரோத காவலில் சுமார் 45 நிமிடம் வரை காவல் நிலையத்தில் அடைத்துவைத்துள்ளர். அதுமட்டுமல்லாமல், சாதிப் பெயர் சொல்லி அவமானப்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வாளர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் இருவரிடமும் புகார் அளித்த அசோக், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் (எஸ்.சி/எஸ்.டி சிறப்பு) இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, பெண் ஆய்வாளர் மதனகலா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன் ஆகிய இருவர் மீதும் 354(b), 323, 324,324(1), 506(1) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார். பணிபுரியும் காவல் நிலையத்திலேயே பெண் ஆய்வாளர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, தேனி மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.