Sat. Dec 21st, 2024

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வெல்ஃபேர் கட்சி சென்னை மாவட்டத்தின் சார்பாக அஞ்சலி கூட்டம்.

14-02-19 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி ஆர் பி எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் நாற்பதிற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான இத்தாக்குதலை வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு சார்பாக வன்மையாகக் கண்டிப்பதுடன். கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்துத் தக்கத் தண்டனை வழங்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தவர்களின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்கிவிட்டோம் என வீம்பழந்த மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

அதே நேரத்தில் இப்பிரச்சனையின் இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களும் கலவரங்களும் ஏற்பட வாய்ப்புண்டு என பலரும் கூறி வந்த நிலையில் இத்தாக்குதல் நடந்திருப்பது பலவித ஐயப்பாடுகளை உருவாக்குகிறது..

வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் சவப்பெட்டி ஊழல் நாடாளுமன்றத்தில் வெடித்த போதுதான் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. பாஜக தேசியத் தலைவர் பங்காரு இலட்சுமணன் இலஞ்சம் பெற்றப் பிரச்சனை உருவான போதுதான் சோம்நாத் கோயிலின் மீதுத் தாக்குதல் நடைபெற்றது. மாலேகானிலும் சம்ஜோதா எக்ஸ்பிரசிலும் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பின்னால் இருந்தது இந்துத்துவப் பயங்கரவாதிகள்தான் என்பதை ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி கண்டுபிடித்த போதுதான் மும்பைத் தாக்குதல் நடைபெற்றது. கர்கரேவும் கொல்லப்பட்டார். மேற்படிச் சம்பவங்களின் மொத்த பலனையும் அனுபவிப்பது பாஜகதான். இவற்றின் மீதான முறையான விசாரணைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிட்டது.

அதைப்போலவேதான் இப்போது ரஃபேல் ஊழலின் மூலம் மோடி, பாஜக கும்பலின் மானம் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அன்றாடம் இது தொடர்பான புதுப்புது ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இப்படிப்பட்டத் தாக்குதலின் மூலம் ரஃபேல் ஊழல் பிரச்சனை திசைத் திருப்பப்படும். பாஜகவும் அதிலிருந்து கொஞ்சம் இளைப்பாறும். மற்றக் கட்சிகளும் மௌனம் காக்கும். நடந்தத் தீவிரவாதத் தாக்குதலைக் குறித்த ஊடகச் செய்திகளைப் பார்க்கின்ற போது பலருக்கும் பலவிதமான நியாயமானச் சந்தேகங்கள் எழுகிறது. ஒரு செயலின் விளைவுகள் யாருக்கு பலனளிக்கிறதோ அவர்கள்தான் அச்செயலின் பின்னால் இருப்பார்கள் என்ற தத்துவத்தின் பின்னணியில்தான் இக்கேள்விகள் எழுகிறது.

முழுக்க முழுக்க இராணுவக் கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பிலும் உள்ள ஒரு பகுதியில் அந்நிய வாகனம் எளிமையாக நுழைந்தது எப்படி? அதற்கு உதவியது யார்?

தாக்குதல் நடைபெற வாய்ப்புண்டு என மாநில காவல்துறை எச்சரித்த பின்னரும் அலட்சியமாக இருந்தது ஏன்?

இன்னமும் பல கேள்விகள் உள்ளன.

நாடாளுமன்றம், மும்பை தாக்குதலின் போது எழுந்த நியாயமான கேள்விகளும் விடை இல்லாமலேயே புதைக்கப்பட்டு விட்டன. அதைப் போன்றில்லாமல் இத்தாக்குதலுக்கு பின்னால் இருந்து திட்டமிட்ட, செயல்பட்ட அனைத்து கருங்காலிகளையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என நம்பிக்கை இல்லாமல் இருப்பினும் நம்பிக்கையோடு மத்திய அரசை வெல்ஃபேர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இப்படிக்கு,

ம. முகமது கவுஸ்

மாவட்ட தலைவர்

வெல்ஃபேர் கட்சி, சென்னை

9003018656