4-லட்சம் வீடுகள் ஒரு நாளில் கிரகப்பிரவேசம் செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…!!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் மாநில மக்களுக்கு மானிய விலையில் வீடு கட்டிக் கொடுத்து அசத்தி வருகிறார். ஆந்திராவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு என்.டிஆர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் ரூ 80,000 மட்டும் செலுத்தினால் போதும் மீதமுள்ள தொகையை அரசே செலுத்தி அவர்களுக்கு வீடு கட்டித் தரும். இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் சுமார் மூன்று லட்சம் வீடுகளும் நகர்ப் புறங்களில் ஒரு லட்சம் வீடுகளும் தற்போது முடிவடைந்த நிலையில் இந்த நான்கு லட்சம் வீடுகளுக்கும் நேற்று ஒரே நாளில் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்துவைத்து வீட்டுக்கான சாவிகளை மக்களிடம் வழங்கினார்.
ஆந்திர அரசு மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி செலவில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி, 30 லட்சம் வீடுகள் கட்டித்தர திட்டம் வகுத்துள்ளது. இதில் இதுவரை 20 லட்சத்து 18 ஆயிரத்து 390 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஊர்க்குருவி