Sat. Dec 21st, 2024

மோடிக்கு கருப்பு கொடி |வைகோ கைது | Peranmai News

மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு….

திருப்பூரில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நடைபெறும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் ஒருவர் மின்மாற்றியில் ஏறி போராடியதால் பரபரப்பு நிலவியது. அண்ணாசிலை அருகே மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 11.15 மணி அளவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க.வினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய உடனேயே போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் பலமுறை முயற்சி செய்தனர். 

ஆனால் அமைதியாக போராட்டம் நடத்துவதால் மோடி வந்து செல்லும் வரை தங்களை அனுமதிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டார். வெகுநேரம் போராட்டம் நடைபெற்றதால் 2-வது முறையாக போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது மதிமுக தொண்டர் ஒருவர் அருகிலிருந்த மின்மாற்றியில் ஏறி கைது நடவடிக்கையை எதிர்த்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதிமுக தொண்டர் மின்மாற்றியில் இருந்து இறங்கிவந்தார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.  மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோ உள்பட ம.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். தமிழருக்கு எதிராக செயல்படும் மோடி திருப்பூரை விட்டு , வீட்டுக்கு திரும்பி செல்லுமாறு மதிமுகவினர் முழக்கமிட்டனர்.

போலீசாரை கண்டித்து தர்ணா, மறியல் போராட்டத்தில் மதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். கஜா புயலால் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காதவர் மோடி. புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை என வைகோ கண்டனம் தெரிவித்தார்.  மேலும் நீட்தேர்வு கொண்டுவந்து தமிழர்கள் மருத்துவம் படிக்கச் முடியாமல் செய்தவர் மோடி என வைகோ குற்றம் சாட்டினார். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அரசு திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சந்திக்க வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம் என மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்…